மகத்தான படைப்பாளனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
(முஹம்மதே) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். [அல்குர்ஆன் 24:30,31]
இன்றைய நவநாகரீக உலகில், பெண்கள் கற்பழிக்கப்படுவதும், அவர்கள் மீது பாலியல்ரீதியாக தொந்தரவுகள் கொடுக்கப்படுவதும் என்றுமில்லாமல் அதிகரித்துள்ளது. அதுவும் பெண்களை போற்றும் இந்திய திருநாட்டில் இத்தகைய குற்றங்கள் பல்கிப் பெருகிவிட்டதைக் கண்டு நேர்மையாளர்கள் பலரும் மனவேதனை அடைந்து வருகின்றனர்...
ஆணும் பெண்ணும் கலந்து வாழும் சமூக அமைப்பில் எப்படிப்பட்ட வரம்புகளுக்குட்பட்டு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அக்கறையற்றவர்களாக மனித சமுதாயம் இருந்து வருவதால்தான் கேடுகெட்ட ஒழுக்கச்சிதைவுகள் ஏற்பட்டு, மிருகத்தைவிட கேவலமாக நடந்துக் கொள்கின்றனர்.
ஒரு பெண்,தான் ஒரு பட்டதாரியாக வேண்டும்,நல்ல கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்விச்சாலையைத் தேடிச் செல்லும் போது, கல்விச்சாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாலியல் வன்முறைக்கு இலக்காகிறாள். தன்னுடன் பயிலும் சக மாணவர்களின் ஈவு இரக்கமற்ற ஈவ்டீசிங் என்கிற பாலியல் சேட்டைகளை தாங்கிக் கொள்ள இயலாமல் தற்கொலையும் செய்துக் கொள்கிறாள்.இது ஏதோ ஒன்றோ இரண்டோ அல்ல.ஏராளமான சம்பவங்களை ஆதாரங்களாக காட்ட முடியும்.
அதேபோல் குரு என்கிற உன்னத ஸ்தானத்தில் இருந்து, மாணவ,மாணவிகளை நல்ல எதிர்கால சந்ததிகளாக மாற்றி, வளமான தலைமுறைகளை உருவாக்கும் பணியில் இருக்கும் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகிகளும், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்வதும், கற்பழிப்பதும் தினசரி நடக்கும் நிகழ்ச்;சியாகி விட்டது.
அதுமட்டுமின்றி, பாலகர்களாக இருக்கும் 3வயது, 4 வயது மழலைகள் கூட ஆசிரியர்களால் வன்புணர்ச்சி செய்யப்படுவதும் மனிதநாகரிகம் மேம்பட்டதாகச் சொல்லப்படும் இந்த நூற்றாண்டில் நம் கண்முன் நடக்கும் வேதனைகளாகும். இத்தகைய மனிதமிருகங்களுக்கு என்ன தண்டனைகள் வழங்கப்பட்டன, சட்டம் அவர்களை என்ன செய்தது என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால் கண் துடைப்பு நாடகங்கள் அரங்கேறுவதையே நாம் காண முடியும்.
மேலும் தன்னுடைய குடும்பசூழ்நிலையை கருதி, தகப்பன், சகோதரன், கணவன் இவர்களின் கஷ்டங்களுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள், அங்கு பணியாற்றும் வக்கிரபுத்தி படைத்த மேலாளர் மற்றும் சக பணியாளர்களின்; பாலியல் தொந்தரவுகளுக்கும் காமப் பசிக்கும் நிர்பந்தமாக இரையாவதும், அதனை வெளியில் சொல்ல முடியாமல் மனம்புழுங்கி தங்களுக்குள் குமைந்து வாழ்வதும்; எழுத்தில் வடிக்க இயலாத வேதனைகளாகும்.
அதேபோல் பேருந்துகளிலும், இரயில்களிலும், கடைத் தெருக்களிலும் பெண்கள் பாலியல் வக்கிரத்துக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகி தினம் தினம் செத்து மடிகின்றனர்.
புதுடில்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் பேருந்தில் மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாசப்படுத்தப்பட்ட அதிர்வலைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மாணவிகள் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம், சென்னையில் 15 வயது மாணவி கடத்தப்பட்டு, கட்டாய தாலி கட்டப்பட்டு, பலாத்காரப்படுத்தப்பட்டது, திரிபுரா மாநிலத்தில் பிஷால்கர் எனுமிடத்தில் வீட்டில் இருந்த பெண்ணை ஒரு கும்பல் கற்பழித்து, மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்த கொடுமை, மும்பையில் தன் கணவனை தேடி வந்த நேபாள பெண்ணொருத்தி அங்கிருந்த மனித மிருகங்களால் கற்பழிக்கப்பட்டது, இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வந்த அவலங்களில் சில.
மானமரியாதைக்கு பயந்தும், அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தலை பயந்தும் மறைக்கப்பட்டவை ஏராளம்.மேலும் பெண்கள் மதம் மற்றும் சடங்குகளின் பெயராலும் துன்புறுத்தப்படுகின்றனர். கடவுளுக்கு நேர்ச்சை என்ற பெயரில் பெண்கள் தேவதாசிகளாக்கப்பட்டு அனுபவிக்கப்படும் கொடுமை பண்டைய காலந்தொட்டே நடைபெற்று வரும் பாரம்பரிய அவலம்.
தேவனுக்கு ஊழியம் செய்யும் நல்லெண்ணத்தில் திருமணம் செய்யாமல், கன்னித்தன்மையோடு சேவை செய்ய வரும் அப்பாவி பெண்களை மதத்தின் பெயரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், பல மத குருமார்கள் காவல்துறையினரால் சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி செய்திகளாகி வருகின்றன.
ஒருதலை காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெண்களின் முகங்களில் ஆசிட்டை வீசி அப்பெண்களின் முகத்தை சிதைப்பதையும், அவர்களின் கண்களை குருடாக்கி அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் கொடுமைகளும் அரங்கேற செய்கின்றன. மேலும், தன்னுடைய ஒருதலைக்காதலை ஏற்றுக் கொள்ளவில்லையே என்கிற கோபத்தின் உச்சிக்கு செல்லும் இந்த மிருகங்கள் அப்பெண்களை கற்பழித்து கொலையும் செய்து விடுகின்றனர்.
நம்பிக்கைக் கொண்டோரே! பெண்களை வலுக் கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை(அலகுர்ஆன்: 4:19)
நபி(ஸல்) அவர்கள், கன்னிகழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்)அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்என்று கூறினார்கள். மக்கள், இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்றார்கள். (புகாரி5136 அபூஹூரைரா(ரலி)
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள்.எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத் தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய்என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள். (புகாரி 5138. கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி)
மேலும் வரதட்சணை பெயரில், மருமகள்கள் ஸ்டவ் வெடித்து கொல்லப்படும் அவலங்களும் தங்குதடையின்றி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.ஒவ்வொரு வருடமும்; 5000 க்கும் குறையாமல் இப்படிப்பட்ட
கொலைகள் நடைபெறுவதாக UNICEF எனும் நிறுவனம் கூறுகின்றது.இவற்றையெல்லாம் ஆள்வோர் மற்றும் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பது பெண்களுக்கு இழைக்கப்படும் மற்றோர் கொடுமையாகும்.
அதேபோல் மக்களுடைய நன்மை கருதி ஆட்சியாளர்கள் சில சட்டங்களை இயற்றுவார்கள். ஆனால் அந்தச் சட்டங்களைச் செயல்படுத்த விடாமல் மக்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். உதாரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் விபச்சாரத்தை தூண்டும் எந்த வாசல்களையும் சட்டம் அடைப்பதில்லை.அதில் முக்கியமாக விபச்சாரத்திற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் சினிமாக்களுக்கு சட்டம் எந்தவொரு கடுமையும் காட்டுவதில்லை.
வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ளும் ஆண்களை இச்சட்டம் கைது செய்வதில்லை. விபச்சாரம் செய்தால் ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒழுக்கக்கேட்டிற்கு அரசாங்கமே ஊக்கமளிக்கிறது.இப்படி தவறுக்குண்டான காரண காரியங்களைக் களையாத சட்டத்தினால் என்ன பயன்?
மேலும் தண்டனை வழங்கவேண்டிய நீதிபதிகளே மனம் குமுறி கருத்துக்கள் சொல்லும் நிலைமையும், அரசாங்கமே மக்களிடம் பத்திரிகைத் துறை வாயிலாக எப்பேர்ப்பட்ட தண்டனை வழங்கலாம் என கருத்துக்கள் கேட்பதும், முடிவெடுக்க தெரியாமல் திணறுவதையும் காணும்போது, இவர்கள் வைத்துள்ள சட்டங்களினால் குற்றங்களை தடுக்க இயலாது என்பது புலனாகிறது.
ஆனால் மனிதகுலத்தின் வாழ்வியல் நெறியாக உலகுக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்களால் கொண்டு வரப்பட்ட இந்த இஸ்லாமிய மார்க்கச் சட்டத்தில் இத்தகைய குற்றங்களுக்கு சரியானதீர்வு சொல்லப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கெதிரான குற்றங்களை களைந்து, தீமைகளை ஒழித்து விட முடியும் என்பதை ஆள்வோர் உணர்ந்து செயல்பட்;டால் வாழ்வு உண்டு.
அல்லாஹ் கூறுகிறான்:
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள். அது வெட்கக் கேடானதாகவும்,தீயவழியாகவும் இருக்கிறது. (பனூஇஸ்ராயில் 17:32)
விபச்சாரம் செய்யும் பெண்ணையும் விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் வர வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கைக் கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (அந்நூர் 24:2)
ஒருவர் ஒரு பெண்ணை கற்பழித்து விடுகிறார். அப்பெண் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட, அந்த நபர் அழைத்துவரப்பட்டு, தன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். அப்பெண்ணை பார்த்து, அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும் என்று கூறி விட்டு, அந்த நபரை கல்லால் எறிந்துக் கொன்றார்கள். (வாயில் இப்னு ஹூஜர்(ரலி) திர்மிதி, அபுதாவூது)
திருமணமாகாத நிலையில் விபசாரம் செய்தவன் விஷயத்தில், அவனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும் ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.(ஸைத் இப்னு காலித்(ரலி) புகாரி 2649)
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மஸ்ஜிந் நபவீ பள்ளிவாசலில்) இருந்தோம். அப்போது (கிராமவாசி)
ஒருவர் எழுந்து, அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: தாங்கள் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே எங்களிடையே தீர்ப்பளிக்க வேண்டும் என்றார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி எழுந்து,(ஆம்) எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்!என்று கூறினார்.(பின்னர் அந்தக் கிராமவாசி) என்னைப் பேச அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொள்ள நபி(ஸல்) அவர்கள்,பேசு! என்றார்கள்.
அவர்,என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். (என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப் பட்டது.) எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர்அடிமையையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் சில அறிஞர்களிடம் விசாரித்த போது என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறிதண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள் என்றுகூறினார்.
இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உன்னிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்படவேண்டும். என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி, உனைஸ்! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (விபசாரக்குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்! என்றார்கள்.( அபூஹூரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் புகாரி 6827, 6828, 7195, 6896)
இஸ்லாம் என்பது மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் கலந்து வழி காட்டும் மார்க்கம். மறுமை வாழ்க்கையை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மறுமைக்காகத் தான் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஆழமாக விதைக்கும் மார்க்கம். கண்ணியமும் ஒழுக்கமும் நிறைந்த மேம்பட்ட கலாச்சார சமூக அமைப்பு உருவாக வேண்டுமென்றால் இஸ்லாம் கூறும் கட்டளைகளை வாழ்வியலில் செயல்படுத்துவதன் மூலமே காண முடியும்.அப்போது தான் பெண்களுக்கெதிரான குற்றங்கள் மறையும்.மேலும் உலகில் நடக்கும் அனைத்து பிரச்சினை மற்றும் குற்றங்களுக்கு இஸ்லாம் மட்டுமே ஒரே தீர்வு.அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் காலம் இதோ மிக அருகில்...
source: www.dubaitntj.net
source: www.dubaitntj.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக