ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம்
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.
பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.
“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.
ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.
இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.
ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.
நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.
எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது

லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?

லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)
மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலதுல் கத்ர் 27வது இரவா?

லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)

இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021

இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022
இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)

அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.