ஞாயிறு, 17 ஜூன், 2012

நபிகளாரின் நற்குணங்கள்


கண்ணியமிகு ஒழுக்கங்களையும் உயர்ந்த நாகரீகங்களையும் கற்றுத்தரும் கருணையாளனாகிய அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான்:

நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக! (முஹம்மதே) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர் (அல்குர்ஆன் 68 : 1-4)

நபி(ஸல்) அவர்கள் முழுமைப் பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது. அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி(ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்...


மக்களுடைய உள்ளங்களின் ஆழத்தில் அவர்களது கண்ணியம் வேரூன்றி இருந்தது. நபியவர்களைப் பாதுகாக்க மக்கள் தங்களையே அர்ப்பணித்தார்கள். 

இது போன்றதொரு மரியாதையையும் மதிப்பையும் வேறு எவரிடமும் இவ்வுலகம் கண்டதில்லை. அவர்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களை ஆழமாக நேசித்தனர். தங்களின் கழுத்துக்கள் வெட்டப்படுவதைக் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் நகத்துக்கு ஓர் இடையூறு ஏற்படுவதைக்கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிறந்த பண்புகளும், அழகிய குணங்களும் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது தான் தோழர்களின் நேசத்திற்குரிய காரணமாகும். நபியவர்களின் குணங்களையும், பண்புகளையும் முழுமையாக நம்மால் இங்கு விவரிக்க இயலாது. 

இருந்த போதும் அம்மாமனிதரின் சில அம்சங்களை இங்கே கோடிட்டுக் காட்டுவதன் மூலம் நல்லுள்ளம் கொண்ட மனித சமூகம் அவர்களைப் பற்றி அறிவதிலும், பின்பற்றுவதிலும் இன்ஷாஅல்லாஹ் ஆர்வங்கொள்ளும் என்ற நம்பிக்கையில் சில சொட்டுத்தேன்களை இங்கே கொட்டித் தருகிறோம். 

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆய்வு செய்து, இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.

இறைவன் நபி(ஸல்) அவர்களை தூதராக நியமித்ததை கண்ணால் கண்டு விட்டு இறைத்தூதர் என்று நம்பினார்களா? என்றால், இல்லை.

திருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது இறைவனின் வேதம் தான் என்று முடிவு செய்து இஸ்லாத்தை ஏற்றார்களா? அதுவும் இல்லை. மேலும், திருக்குர்ஆன் வசனங்களில் நூறில் ஒரு பகுதி அருளப்படுவதற்கு முன்பே பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.காரணமென்ன?. அந்த மக்கள் முஹம்மது நபியை கண்டார்கள்!

அவர்களின் நாற்பது வருட வாழ்க்கையில் தூய்மையைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் பொய் சொல்லி பார்த்தது கிடையாது. அவர்கள் யாரையும

ஏமாற்றியதாகவோ அல்லது யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அவர்கள் கண்டதில்லை. 

ஊரில் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் அவர்கள் கண்டதில்லை. மாறாக, தமது செல்வத்தைப்பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பதை கண்டார்கள். சுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையை கண்டு, இவரை நூறு சதவீதம் நம்பலாம் என்ற நம்பிக்கை தான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முதல் காரணமாக இருந்தது.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்தகால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் என்று கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்தகால வாழ்க்கையும் முழு தூய்மையாக இருக்க முடியாது. பெரும் பெரும் மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத்தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்க கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் ''நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது'' என்ற சொல் வழக்கும் நம்மிடையே உள்ளது. ஆனால்,  தான் இறைத்தூதர் என்பதற்கு தனது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் உலகிலேயே நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

திருமறைக் குர்ஆனும் இதை தான் முன் வைக்கிறது:

"அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன்.அவனும் உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?''  (அல்குர்ஆன் 10 : 16)

நபி(ஸல்) அவர்கள், தம் தோழர்களிடம் நற்குணங்களை போதிப்பதற்கு முன்னால் அவற்றை தம் நடைமுறை மூலம் அவர்களிடையே விதைத்தார்கள். 

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நபி(ஸல்) அவர்கள் கெட்ட குணம் உள்ளவர்களாகவோ,கெட்ட செயல் உள்ளவர்களாகவோ இருந்ததில்லை. குணத்தில் அழகானவரே உங்களில் சிறந்தவர் என சொல்பவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்.( புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மது) 

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் பத்து வருடங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு பணி செய்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சீ என்று என்னிடம் கூறியது கிடையாது. எந்த விஷயம் குறித்தும் ஏன் இப்படி செய்தாய்? இவ்வாறு செய்திருக்க கூடாதா? என்று கேட்டதும் கிடையாது. (நூல் : முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் தங்களது காலணிகளையும், ஆடைகளையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள்.உங்களில் ஒருவர் வீட்டில் வேலை செய்வது போன்றே நபியவர்களும் தங்களது வீட்டில் வேலை செய்வார்கள். மனிதர்களில் ஒருவராகவே இருந்தார்கள். தங்களது ஆடைகளை தானே சுத்தம் செய்வார்கள். தனது ஆட்டில் தானே பாலைக் கறப்பார்கள். தங்களது வேலைகளை தானே செய்து கொள்வார்கள். (நூல் :மிஷ்காத்)

ரூபைய் பின்த் முஅவ்வித்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்களை நீ பார்த்தால் அவர்கள் உதிக்கும் அதிகாலை சூரியனைப் போல் இலங்குவார்கள். (நூல் :தாரமி)

பிற மதத்தவர்களிடம் அன்பு பாராட்டுதல்:

 நபி(ஸல்) அவர்களின் மகத்தான நற்பண்புகளில் ஒன்று பிற மதத்தவர்களிடம் அன்பு பாராட்டி அவர்கள் நடந்துக் கொண்ட முறையைச் சொல்லலாம். பொதுவாகவே ஒரு மதத்தின் ஆன்மீகத்தலைவர்கள் வேறு மதத்தவர்களை இழிவாக கருதுவது வழக்கம். அதுபோல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்பவர்கள் ஒரு மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுடையோராக இருந்தால், அவரும் பிற மதத்தவர்களை இழிவாகவே கருதுவார். ஆனால் ஒரே நேரத்தில் ஆன்மீகத்தலைமையையும், ஆட்சித் தலைமையையும் பெற்றிருந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் அன்பு பாராட்டி நடந்துக் கொண்ட மனித நேய சம்பவங்கள் பலவற்றை அவர்களது வரலாற்றில் நாம் காணலாம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஜகாத் எனும் தர்மம் கட்டாயக்கடமை என்பதை முஸ்லிமல்லாத மக்களும் அறிவார்கள். செல்வந்தர்களிடம் திரட்டப்படும் இந்த நிதி எட்டுவிதமான பணிகளுக்கு செலவிடப்பட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் நல்லிணக்கம் வளர்வதற்காக அவர்களுக்காக வழங்குவதும் அப்பணிகளுள் ஒன்று என இஸ்லாம் இயம்புகிறது. (பார்க்க : அல்குர்ஆன் 9:60)

உலகில் எந்த மதத்திலும் பிற மதத்தினருக்கு உதவுவது மார்க்கத்தில் கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்டதில்லை. எந்த மதத்திலும் இத்தகைய ஒரு சட்டத்தை காணவே முடியாது.

சில தனிப்பட்ட நபர்கள் வேண்டுமானால் மதம் கடந்த மனித நேயத்துடன் நடந்துக் கொள்வார்கள். இத்தகையோர் குறைந்த எண்ணிக்கையில் எல்லா மதங்களிலும் இருப்பார்கள். இது அந்த தனிப்பட்ட நபர்களின் பெருந்தன்மையினால் ஏற்படும் விளைவு தானே தவிர அவர்கள் பின்பற்றும் மதத்தில் கடமையாக்கப்பட்டதால் அல்ல. 

ஆனால் நபி(ஸல்) அவர்களோ, இவ்வாறு பிற சமய மக்களுக்கு வழங்குவதை இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக ஆக்கினார்கள். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இவ்வாறு முஸ்லிம் அரசின் கருவூலத்திலிருந்து கண் துடைப்பாகவோ, அற்பமாகவோ வழங்குவதா என்றால் நிச்சயமாக இல்லை.மாறாக மிக அழகிய முறையில் வழங்க வேண்டும். அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்று அதனை நமக்கு படம் பிடித்து காட்டுகின்றது.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தின் பெயரால் உதவிகள் கேட்டார். இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு அவருக்கு ஆடுகளை வழங்கினார்கள். அவர் தனது சமுதாயத்தினரிடம் சென்று, என் சமுதாயமே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நிதி நெருக்கடியைப் பற்றி அஞ்சாமல் முஹம்மது வாரி வழங்குகிறார் எனக் கூறினார் .  (நூல்:முஸ்லிம் 4627)

இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு ஆடுகள் என்ற சொற்றொடர் மிக அதிகமாக வழங்கும் போது கூறப்படும் சொல் வழக்காகும். நபி(ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு அளவுக்கதிகமாக வாரி வழங்குவது எந்தளவுக்கு இருந்ததென்றால், இதற்காகவே பலரும் இஸ்லாத்தை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பும் அளவுக்கு இருந்தது. மற்றொரு சான்றையும் இங்கு காண்போம்.

எங்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. அதற்காக நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் நின்றோம். அல்லாஹ்வின் தூதரே! இது யூதருடைய பிரேதம் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் என்று கூறினார்கள்  (புகாரி 1311)

இறந்தவரின் உடலை எடுத்துச்செல்லும்போது இந்த இருபதாம் நூற்றாண்;டில் கூட கலவரங்கள் நடைபெறுவதை காண்கிறோம். எதிரி சமுதாயத்தவரின் உடல்களை எங்கள் தெருவழியாக கொண்டு செல்லக் கூடாது என்று ஓரே மதத்தைச் சேர்ந்தவர்களே வெட்டி, குத்திக் கொண்டு கலவரத்தில் ஈடுபடுவதை நாம் தினமும் நேரிலும், பத்திpரிகை மூலமாகவும் காண்கிறோம். 

உயிருடன் இருக்கும்போது நடமாடுவதற்கு அனுமதியளித்தவர்கள், இறந்த உடலுக்கு அந்த உரிமையை மறுத்து வருவதையும் காண்கிறோம். ஆனால் இந்த மாமனிதரின் வரலாற்றைப் பாருங்கள். நபி(ஸல்) அவர்கள் ஆட்சித்தலைவராக இருக்கிறார்கள். அவர்களின் எதிரி சமுதாயமாகவும், சிறுபான்மை சமுதாயமாகவும் யூதர்கள் இருந்தனர். எதிரியாகவும், சிறுபான்மையாகவும் இருந்த யூதரின் உடல் முஸ்லிம் அரசின் அதிபர் வசிக்கும் தெரு வழியாக சர்வசாதாரணமாக எடுத்துச் செல்ல முடிகிறது. 

மேலும், பிரேதம் கடந்து செல்லும் போது, உள்ளத்தில் வெறுப்பைச் சுமந்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் எழுந்து நின்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. பிரேதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியதன் மூலம் உளப்பூர்வமாகவே செய்தார்கள் என்;பதை அறியலாம். உயிரோடு இருப்பவருக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்துவதை அடியோடு தடை செய்த நபி(ஸல்) அவர்கள், இறந்த உடலுக்கு மட்டும் எழுந்து நின்று மரியாதை செய்ய் கட்டளையிட்டதில் சமுகத்திற்க்கு பல படிப்பினைகள் அடங்கி உள்ளன. எல்லா வல்ல ரஹ்மான் அல்லாஹ் நம் அனைவரையும் இந்த மாமனிதரை பின்பற்றும் நன்மக்களாக ஆக்கி அருள் புரிவானாக!

நன்றி: துபை TNTJ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக